நம் பள்ளியில் தமிழ்ப் புத்தாண்டு விழா ஏப்ரல் 13 ஆம் நாள் திங்கட்கிழமை அன்று மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. அன்றைய காலைப் பொழுது பாரம்பரிய உணவுகளின் மணத்துடனும், நம் மண்ணின் விளையாட்டுகளுடனும் மிகச் சிறப்பாகத் தொடங்கியது.
குறிப்பாக, கோலி குண்டு, பல்லாங்குழி, வட்டு உருட்டுதல் மற்றும் இராமா இராவணா போன்ற பல பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கேற்றனர். இப்போட்டிகள் மாணவர்களுக்கு நமது கலாச்சாரத்தின் மீதான பெருமையையும், விளையாட்டின் வழியாகக் கிடைக்கும் புத்துணர்வையும் வழங்கின.
பிற்பகலில் ‘ஸ்மார்ட் பவிலியன்’ அரங்கில் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. வரவேற்புரையுடன் தொடங்கிய இவ்விழாவில், கண்ணதாசனின் கவிதைகள் மற்றும் கண்கவர் நடனங்கள் அரங்கேறின. இந்த விழாவின் ஒரு முக்கிய அங்கமாக, ‘உடைகளின் உருமாற்றம்’ என்ற நிகழ்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதில் அக்காலம் முதல் இக்காலம் வரை தமிழர்களின் உடைகள் எவ்வாறு உருமாறி வந்துள்ளன என்பதை மாணவர்கள் மேடையில் மிக அழகாகக் காட்சிப்படுத்தினார்கள். பழங்கால ஆடை மரபுகள் தொடங்கி இன்றைய நவீன கால உடைகள் வரையிலான அந்தப் பயணம், ஒரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது.
மேலும், வில்லுப்பாட்டு, நாட்டுப்புற நடனம் மற்றும் நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் தமிழரின் கலைப் பெருமையைப் பறைசாற்றின. ‘தமிழோடு விளையாடு’ மற்றும் தனிநபர் மேடை நகைச்சுவை நிகழ்வுகள் விழாவிற்கு மேலும் சுவாரசியத்தைச் சேர்த்தன.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக நன்றியுரையுடன் இந்த விழா இனிதே நிறைவுற்றது. இந்தத் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் நம் பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்ற ஒரு மறக்க முடியாத இனிமையான அனுபவமாக அமைந்தது.






















